மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமாநகர் கிராமத்தில் நாகம்மாள் விவசாய சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கைப் பசளை இன்றைய தினம் சந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

நாகம்மாள் விவசாய சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட இப்பசளை தயாரிப்புக்கான தொழில்நுட்பப் பயிற்சிகளை ஜப்பானிய பீஸ் விட்டு நிறுவனம் வழங்கியிருந்தது . முதற்கட்டத்தில் 5,000kg பசளையினை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களுக்கான பணம், உபகரணங்களுக்கான உதவி போன்றவற்றை சுவிற்சலாந்தில் வசிக்கும் விஸ்வலிங்கம் யோகானந்தன் அவர்கள் கிராமியக்கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக வழங்கியிருந்தார்.
அதற்கமைய தோப்பூர் கமநல சேவை நிலையத்தின் விவசாயப் போதனாசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நேரடிக் கண்காணிப்பிலும் நெறிப்படுத்தலிலும் தயாரிக்கப்பட்ட பசளையானது விவசாயச் செய்கை தொடர்பான குழப்பத்தில் உள்ள விவசாயிகளுக்கு 100% நம்பிக்கையூட்டும் விதமாக இன்றைய தினம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

நாகம்மாள் விவசாய சம்மேளனத்தின் செயலாளர் தலைமையில், வீரமாநகர் இயற்கைப் பசளை உற்பத்தி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் தலைமைக் கமல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ஹைசர் அவர்கள் தோப்பூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு நௌபர்.விவசாயப் போதனாசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் மூதூர் பிரதேச சபையின் செயலாளர் வீ.சத்திய ஜோதி பிரதேச சபை உறுப்பினர் து.ஜெகன் ஆசிரியர் ஜீவரூபன் சம்பூர் போலீஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோருடன் கிராமியக் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.தீபராஜ் அவர்களும் கலந்து கொண்டு இயற்கைப்பசளைஉற்பத்தியின் அவசியம் தொடர்பிலும் அதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பிலும் விளக்கமளித்ததுடன் நாகம்மாள் விவசாய சம்மேளனத்தினால் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 5,000kg பசளையினையும் தோப்பூர் கமநல சேவை நிலையத்தினர் உத்தியோக பூர்வமாகப் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து இப்பசளை தயாரிப்பு முறை தொடர்பான செயன்முறை விளக்கம் விவசாயப் போதனாசிரியர் திரு.யூ,மினாஹீர் அவர்களினால் வழங்கப்பட்டது.
இரசாயன உரப்பாவனையினால் ஆயுட் காலத்தையும் குறைத்து மண்வளத்தையும் அழிக்கின்ற இன்றைய காலத்தில் எமது எதிர்கால சந்ததிக்கு நஞ்சற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையினையும் மண்வளத்தினையும் வழங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இப் பெருமுயற்சிக்காக உதவிய மற்றும் உதவிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர் பிரதேச வாழ் மக்கள் .

க. காண்டீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed