காவத்தை, வட்டபொத்த தோட்டத்தில் பெரும்பான்மையினர்களால் தாக்கப்பட்ட தோட்டப்புற மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்தார்.

குறித்த தோட்டத்தின் மத்திய பிரிவில் அமைந்துள்ள தோட்டக் குடியிருப்பின் மீது குறித்த தோட்டத்திற்கு அண்மித்த யடாகர கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மையின கும்பல் தோட்ட குடியிருப்பில் வாழ்ந்த மக்களின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, காயமடைந்த தமிழ் இளைஞர்கள் மூவரும் அவரது தாயாரும் கஹவத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயம் குறித்து தகவலறிந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்று அச்சத்தில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, இவ்விடயம் குறித்து இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு தெரிவித்ததோடு மேலதிகமாக இச்சம்பவம் தொடர்பாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களையும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தின் போது, தோட்டக் குடியிருப்பொன்றும், நான்கு முச்சக்கர வண்டிகளும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளதுடன் தாக்கப்பட்ட இளைஞருக்கு சொந்தமான சுயதொழிலில் ஈடுபடும் இயந்திரங்களும் மற்றும் அவரது இரண்டு பவுன் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களுக்காக தான் துணிந்து செயற்படுவதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *