• மாவட்ட அரசாங்க அதிபர் –

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சராசரியாக நாளொன்றுக்கு 109 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாகவும் இம்மாத ஆரம்ப முதல் கடந்த16ஆம் திகதிவரை 1639 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 27 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடக கலந்துரையாடலின்போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

தற்போதைய நிலையில் அதிகமானவர்கள் தொற்றுக்கு உட்படுகின்றனர். மாவட்ட மக்களாகிய அனைவரும் இவ்வைரசிலிருந்து பாதுகாப்பு பெற பொறுப்புடன் செயற்படல் வேண்டும்.

தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு மாவட்ட வர்த்தக சங்கத்திடம் மக்கள் அத்தயவசிய தேவைகளுக்கு புறம்பாக கடைகளுக்கு வருவதனாலும் நடமாடுவதனை கருத்திற்கொண்டு இதனை கட்டுப்படுத்தி கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டியதற்கிணங்க அவர்கள் தாமாக சுயமாக முன்வந்து அத்தியவசிமற்ற கடைகளை மூட முன்வந்ததாகவும் இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

திருகோணமலை பட்டினமும் சூழல், கந்தளாய் மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் கடந்த சில நாட்களில் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதிகமான தொற்றாளர்கள் இருக்கும் கிராமங்களுக்கு வைரஸ் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பேணல் கட்டாயமானது.அநாவசியமாக நடமாடுவதை தவிர்த்து அத்தியவசிய தேவைக்கு மாத்திரம் வெளியில் செல்ல வேண்டும். அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும். பொருட்தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே மக்கள் இத்தருணத்தில் வைரஸ் பரவா வண்ணம் நாளாந்த ஜீவனோபாய செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *