கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை காட்டிலும் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களிடமிருந்து கொரோனா வைரஸ் ஏனையோருக்கு பரவுவது 65 சதவீதத்தினால் குறைவடைவதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்புசக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின்பணிப்பாளர் கலாநிதி சந்திமஜீவந்தர தெரிவித்துள்ளார். 

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக கொவிட் வைரஸ் பரவலை தடுப்பதற்கு பாரியளவில் பங்களிப்பை செய்யமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

அவ்வாறே, டெல்டா கொவிட் திரிபு தொடர்பில் புதிய பல தகவல்களை கண்டறிந்துள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, டெல்டா தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு இரண்டு நாட்களின் பின்னரே நோய் பரவலடையும் என கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு முன்னதான ஆய்வுகளில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அரைநாளுக்குள் அது பரவ ஆரம்பிக்கும் எனக் கண்டறியப்பட்டது. 

அவ்வாறே இதற்கு முன்னதான ஆய்வுகளில் தொற்றாளர் ஒருவரிடம்  3- 4 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் வெளிப்படும் என கண்டறியப்பட்டிருந்த போதிலும் புதிய ஆய்வுகளுக்கமைய நோய் அறிகுறி வெளிக்காட்டும் காலம் ஐந்தரை முதல் 6  நாட்கள் வரை அதிகரித்துள்ளது.

டெல்டா வைரஸின் பரவல் வேகமானது சீனாவின் வூகான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸை விட 4 மடங்கு அதிகம் என்றும் அல்பா வைரஸை விட 2 மடங்கும் அதிகமானது என்றும் கலாநிதி ஜீவந்தர தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

அதற்கமைய கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கியமான ஆயுதம் தடுப்பூசியே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *