சுகாதார அமைச்சின் அனுமதியின்றி தனது மகளுக்கு பைஸர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுத்த வைத்தியரும், குறித்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய குடும்பநல சுகாதார உத்தியோகத்தரும் உடன் அமுலாகும் வகையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறும் வகையில், குறித்த வைத்தியர், 12 வயதான தனது மகளுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் தினுஷா பெர்னாண்டோவிடம் நாம் வினவியபோது, சிலாபம், கொக்காவில ஆரம்ப பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தல் நடவடிக்கை தொடர்பில் விசேட விசாரணையொன்று மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

விசாரணைகளில் வெளிப்படுத்தப்படும் விடயங்களுக்கமைய, குறித்த வைத்தியர் மற்றும் குடும்பநல சுகாதார உத்தியோகத்தருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த தடுப்பூசி மையத்திலுள்ள சிசிரீவி கெமராக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசி செலுத்தல் நிலையத்துக்கு வருகைதந்த மேற்படி வைத்தியரின் மகளை அங்கிருந்த பாதுகாப்பு பிரிவினர் இவ்விடத்திலிருந்து வெளியேற்றியிருந்த போதிலும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் அச்சிறுமியை மீண்டும் அழைத்துவந்து தடுப்பூசி பெற உதவிசெய்யும் விதம் குறித்த சிசிரீவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள வைத்தியரிடம், இச்சம்பவம் தொடர்பில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் மேற்கொண்ட நீண்ட விசாரணைகளையடுத்து, குறித்த வைத்தியர் சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொக்காவில தடுப்பூசி மையத்தில், வெளிமாகாணங்களிலிருந்து வருகைதந்தவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் இத்தகைய ஒழுக்கக் கேடான விடயங்கள் இடம்பெறுவதையிட்டு தான் மிகவும் வருத்தமடைவதாகவும், சம்பவம் குறித்து குற்றவாளிகளால் இனங்காணப்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் புத்தளம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *