நியூஸிலாந்து, ஒக்லண்ட் நகரிலுள்ள சிறப்பங்காடியொன்றில் நேற்றைய தினம் 6 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் ஒருவர் அந்நாட்டு காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இந்த நிலையில், இலங்கை புலனாய்வு துறையினரால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் காத்தான்குடி பகுதியை சேர்ந்த முஹமது சம்சுதீன் ஆதில் என்ற 31 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது. 

காத்தான்குடி, கபூரடி வீதியைச் சேர்ந்த குறித்த நபர் 1989 ஆண்டு பிறந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

தாய், தந்தை, மூன்று சகோதரர்கள் உட்பட 6 பேரைக்கொண்ட குறித்த நபரின் குடும்பம், யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டுகளின் பின்னர் கொழும்புக்கு இடம்பெயர்ந்துள்ளது. 

கொழும்பில் ஆரம்பத்தில் மொரட்டுவை பகுதியில் வசித்து வந்த அவர்கள், பின்னர் கொலன்னாவைக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நபரின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் கனடாவிலும், சகோதரர்கள் இருவர் கட்டார் மற்றும் சவுதி அரேபியாவில் வசிப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

இலங்கையில் உள்ள குறித்த நபரின் தாய், தற்போது காத்தான்குடியில் வசித்து வருவதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்நபர் கடந்த 2011 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு சென்றுள்ளார். அங்கு சிரிய நாட்டவர் ஒருவருடன் தங்கியிருந்த நிலையில், அவர் மூலமாக அடிப்படைவாத கொள்கையுடைய நபராக மாறியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேற்படி இலங்கையர் 10 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தாக்குதலானது, பயங்கரவாத தாக்குதலாகும் என நியூஸிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆடெர்ன் நேற்று தெரிவித்தார்.

கொல்லப்பட்ட இலங்கையர், நீண்டகாலமாக கண்காணிப்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் அடிப்படைவாத சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *