ஈழத்து இலக்கிய பரப்பில் நந்தினி சேவியர் என அறியப்பட்ட திரு சேவியர் அவர்கள் இன்று காலை இலக்கிய உலகை விட்டு நீங்கினார் .அன்னார் யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை தனது இறுதிக்காலம்வரை வசிப்பிடமாகவும் கொண்டு இலக்கிய உலகில் பயணித்தவர் .

ஈழத்தின் கலை இலக்கியப்புலத்தில் தவிர்க்கமுடியாத இலக்கிய ஆளுமையாக தனக்கான தடத்தைப்பதித்துக்கொண்டவர் நந்தினி சேவியர் அன்னாரின் இழப்பு ஈழத்து இலக்கிய பரப்பில் ஒரு வெற்றிடமேயாம் .

பாடசாலைக்கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை,சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார் . பின்னர் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியிலும் தனது உயர்கல்வியைத்தொடர்ந்த அன்னார்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச்சார்பு) வாலிப சங்க இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். இலக்கியச் செயற்பாடுகளுடன் சமூகச்செயற்பாடுகளிலும் முன்நின்று உழைத்தவராவார் .

சிறுகதைத்துறையிலேயே நன்கு அறியப்பட்ட இவர் நந்தினி சேவியர் என்ற பெயரிலேயே அதிக படைப்புகளை பிரசவித்திருக்கிறார் இவருடைய பத்தி எழுத்துக்கள் மற்றும் கட்டுரைகள் சில வ.தேவசகாயம், தாவீது கிறிஸ்ரோ ஆகிய புனைப்பெயரிலும் வெளிவந்துள்ளது .

அன்னாரின் படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

மேகங்கள், கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன ஆகிய நாவல்களையும் ஒரு வயதுபோன மனிதரின் வாரிசுகள் என்ற குறுநாவலையும் எழுதியுள்ளார். .

மேலும் 2012 ஆம் ஆண்டிலிருந்து ‘தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும்’ என்ற பாடநூலில் “நந்தினிசேவியர் சிறுகதைகள்” என்ற முருகையனின் கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளமை அன்னாரின் இலக்கிய பங்களிப்பிற்கும் ஆளுமைக்கும் உயர்சான்றாக அமைகிறது .

தமிழ்நாட்டில் செப்ரெம்பர் 2000 இல் காலச்சுவடும் சரிநிகரும் இணைந்து நடாத்திய தமிழினி 2000 மாநாட்டில் கலந்து கொண்டு ‘இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் மார்க்சிய இலக்கியம்’ என்ற கட்டுரையை சமர்ப்பித்து உரை நிகழ்த்தியமை குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஓர் நாடுகடந்த இலக்கிய பணி எனலாம் .

அன்னாரின் வெளியீடுகளாக
அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் (சிறுதைத் தொகுப்பு) பதிப்பு 1993, வெளியீடு – தேசிய கலை இலக்கியப் பேரவை
நெல்லிமரப் பள்ளிக்கூடம் (சிறுகதைத் தொகுப்பு) பதிப்பு 2011, வெளியீடு கொடகே.
நந்தினி சேவியர் படைப்புகள், 2014 டிசம்பர், விடியல் பதிப்பகம், சென்னை ஆகியவையாகும்

அன்னாருக்கு ஈழநாடு பத்திரிகையின் 10வது ஆண்டு நிறைவையொட்டி அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட நாவல் போட்டியில் ‘மேகங்கள்’ என்ற நாவல் இரண்டாம் பரிசு பெற்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் 50 வது ஆண்டு நிறைவையொட்டி நடத்திய நாவல் போட்டியில் ‘ஒரு வயதுபோன மனிதரின் வாரிசுகள்’ என்ற குறுநாவல் தங்கப் பதக்கத்தை முதற்பரிசாகப் பெற்றது.
1993 இல் வெளிவந்த சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான முதற்பரிசை விபவி சுதந்திர இலக்கிய அமைப்பு ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ என்ற நூலுக்கு வழங்கியது.
உள்ளுராட்சித் திணைக்களம் நடத்திய ‘தமிழின்பக் கண்காட்சி’ யில் ‘அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ நூலுக்கு முதற்பரிசு வழங்கியது.
இவரது இலக்கியப் பங்களிப்புக்காக 2011 இல் கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது கிடைத்தது.
2015 கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது[1]
வடமாகாண சிறந்த நூல் பரிசு, 2012 – நெல்லிமரப்பள்ளிக்கூடம் (சிறுகதைத் தொகுதி)
சாகித்திய மண்டலப் பரிசு, 2012 – நெல்லிமரப் பள்ளிக்கூடம் (சிறுகதைத் தொகுதி)
கிழக்குமாகாண சிறந்த நூல் பரிசு (பல்துறை) – நந்தினி சேவியர் படைப்புகள்
கலாபூஷணம் விருது – 2013
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் 2014-2015 ஆம் ஆண்டுக்கான “சங்கச் சான்றோர் விருது” வழங்கிக் கெளரவித்தது ஆகிய கௌரவங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .

ஈழத்து இலக்கிய உலகம் தன் ஊழிக்காலம்வரை அன்னாரின் பெயர்பேசும்

அன்னாருக்கு எமது கொட்டியாரம் ஊடகவலையமைப்பின் அஞ்சலிகள் உரித்தாகட்டும் .

நன்றி Wikipedia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *