எங்களுக்கும் வரலாறு இருக்கின்றது. அதனை நாம் கூற முடியும். ஆனால் எங்கள் மக்கள் பாரிய அழுத்தங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என காட்டினால் மக்கள் மனமுடைந்து மிகவும் மோசமான நிலைக்கு செல்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித’துள்ளார்.

வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவர் ஐ.நாவுக்கு அனுப்பிய கடித விவகாரத்தால் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய பொறுப்பு எங்களையும் சார்ந்திருக்கிறது. ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனிப்பட்ட கட்சிகள் பங்கு எடுக்க முடியாது. இது விடுதலை சம்மந்தமாக உருவாக்கப்பட்ட அமைப்பு. அந்த அமைப்பை சிதைப்பதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது.

எமது மக்கள் பாரிய பிரச்சனையை தாங்கிக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் மாறி மாறி நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களைப் பற்றி பல கருத்துக்களை சொல்லியிருந்தாலும் கூட அதற்கான விளக்கத்தை எங்களாலும் சொல்ல முடியும் என்பது உண்மையான விடயம். எங்களுடைய இயக்கத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றையும் நாங்கள் சொல்ல முடியும். அதற்கான காரணங்களையும் சொல்ல முடியும். எங்களுடைய மக்களுக்காக அவர்களது விடுதலைக்காக நாங்கள் துப்பாக்கி தூக்கியவர்கள்.

எப்பொழுதும் எங்களது சிந்தனை மக்களது விடுதலைக்காக இருக்க வேண்டும் என்பதே. ஆகவே, மாறி மாறி தனிப்பட்ட எதிர் கருத்துக்களை சொல்வதன் மூலம் மக்கள் வெறுப்படையும் தன்மை உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒன்றுமை இல்லாத காரணத்தினால் 10 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றோம். வடக்கு – கிழக்குகில் தேசியத்தோடு நிற்பவர்கள் தெரிவு வெசய்யப்பட்டாலும் கூட, தென்னிலங்கை கட்சிகளை சார்ந்து இருக்கும் தமிழர்களுக்கும் கூடுதலான ஆசனங்கள் கிடைத்திருக்கின்றது. இதிலிருந்து மக்கள் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற செய்தியை சொல்லியிருக்கிறார்கள். ஆகவே பதிலுக்கு பதில் சொல்லாமல் விடுவதால் நாங்கள் அவர்கள் சொல்லும் விடயங்களுக்கு ஒத்துபோவதாக யாரும் கருதி விட முடியாது.

எங்களுக்கும் வரலாறு இருக்கிறது. பதில் சொல்ல முடியும். மக்கள் காணியில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோர் வரை பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அது சம்மந்தமாக செயற்படுவதற்கான முயற்சியை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் மாற்று கருத்துக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. எவரவர் எப்படி செயற்படுகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். அதனை மக்கள் முடிவு எடுக்கட்டும். எதற்காக நாங்கள் போராட்டத்தை மேற்கொண்டோமோ அதேசிந்தனையுடன் எங்கள் தலைவர்கள் விட்டுச் சென்ற பணியை செய்வோம். எங்கள் மக்கள் பாரிய அழுத்தங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என காட்டினால் மக்கள் மனமுடைந்து மிகவும் மோசமான நிலைக்கு செல்வார்கள். எங்கள் மீது உள்ள நம்பிக்கை சிதைக்கப்படும் போது சிங்கள கட்சிகளுடன் போகும் நிலையையும் உருவாகும். அதனால் நாம் மௌனம் காப்பது எங்கள் மீதான கருத்துக்களை ஏற்றுக் கொண்டோம் என்பது அல்ல எனத் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *