உள்ளூராட்சி மன்ற தேர்தல் 6 மாதங்களால் பிற்போடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலத்தினை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை இதற்கு காரணம் என அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் பரவல் உள்ளிட்ட மேலும் பல விடயங்களை கருத்திற்கொண்டு இவ்வாறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலத்தினை நீடிப்பது தெடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தற்போது பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக குறித்த தகவல் வட்டாரங்கள் மேலும்  தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலம் எதிர்வரும் 2022 பெப்ரவரி 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

உரிய காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாயின் எதிர்வரும் நவம்பரில் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட வேண்டும்.

எனினும், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலத்தினை 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு, விடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சருக்கே அதிகாரம் உள்ளதாகவும், அவ்வாறு நீடிக்கப்பட்டால் 6 மாதங்களுக்கு தேர்தல் பிற்போடப்படும் எனவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவை எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு கேட்டபோது, உள்ளுராட்சி சபைத் தேர்தலை பிற்போடுவது சிறந்த விடயமல்ல என அவர் தெரிவித்தார். 

பல வருடங்களாக மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படாமல், மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதியின்றி அதிகாரிகள் ஊடாக இயங்கி வருகின்றன. 

இது ஜனநாயகத்திற்கு எதிரானதொரு செயற்பாடாகும். எனவே, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *