அரசியல் நோக்கங்களுக்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு, மோசடியான முறையில் அபிவிருத்தி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, கொழும்பு – 10 டார்லி வீதியில் உள்ள பல கோடி ரூபா பெறுமதியான காணி, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் மீள கையகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தனியார் நிறுவனம், ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை மீறி, செயற்பட்டுள்ளமை காரணமாக, சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையின்பேரில், இந்த கையகப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான, கொழும்பு – 10 டார்லி வீதியில் உள்ள 214 பேர்ச்சர்ஸ் விஸ்தீரனமான குறித்த காணியில், அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்காக, எல் எண்ட் டி உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தனியார் நிறுவனத்திற்கு, அமைச்சரவையின் அனுமதியுடன் கையளிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், குறித்த தனியார் நிறுவனம், 5 ஆண்டுகளில் எந்தவொரு அபிவிருத்தியையும் அந்தக் காணியில் மேற்கொள்ளவில்லை.

இதனிடையே, எல் எண்ட் டி உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தனியார் நிறுவனத்தினால், குறித்த காணி, வேறு திட்டத்தை மேற்கொள்வதற்காக, லங்கா ரியலிட்டி இன்வெஸ்ட்மன்ட் என்ற தனியார் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக கையளிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி செய்ய இயலாதபட்சத்தில், குறித்த காணியை அரசாங்கத்திற்கு மீள கையளிக்க வேண்டி இருந்தும்கூட, அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மறைத்து, சில அரசியல் ஆசீர்வாதத்துடன், முறையற்ற விதத்தில் இலாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, இதனூடாக சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, இந்தப் பெறுமதியான காணி தொடர்பான கலந்துரையாடல், 2016 ஆம் ஆண்டு மீள முன்னிலைக்கு வந்தது.

2006 ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்ட பெறுமதிக்கு, மேலும் 5 ஆண்டுகளுக்காக மீண்டும் சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்ட நிறுவனத்துக்கு, குறித்த காணியை அபிவிருத்தி செய்வதற்காக, மீள கையளிக்கப்பட்டமையானது, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக எந்தவொரு அமைச்சரவை அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

வருடங்கள் கடந்த நிலையில், எந்தவொரு பெறுமதியையும் சேர்க்க முடியாமல்போன குறித்த காணியை, அரசாங்கத்திற்கு மீள கையகப்படுத்துவது தொடர்பில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, அதன் பின்னரே அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, இது குறித்து மேற்கொள்ளப்படக்கூடிய சட்ட நடவடிக்கை தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோரியுள்ளது.

காணி தொடர்பான அனைத்து உடன்படிக்கைகளையும் ஆராய்ந்த சட்டமா அதிபர் திணைக்களம், குறித்த உடன்படிக்கையை இரத்துச்செய்து, அந்தக் காணியை அதிகார சபைக்கு மீள கையகப்படுத்துமாறு, வீடமைப்பு அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதற்கமைய, வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள், குறித்த காணியை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும், குறித்த காணி கையகப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அந்தக் காணியில் இருந்த லங்கா ரியலிட்டி இன்வெஸ்ட்மன்ட் நிறுவனம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, இவ்வாறு கையகப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது என குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள வீடமைப்பு அதிகாரசபை, குறித்த கையகப்படுத்தல் தொடர்பில், அதிகார சபை, உரியவாறு, ஒப்பந்தமயமாக்கப்பட்டிருந்த எல் எண்ட் டி உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தனியார் நிறுவனத்திற்கு அறியப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

குறித்த காணியில் உள்ள லங்கா ரியலிட்டி இன்வெஸ்ட்மண்ட் தனியார் நிறுவனத்துடன், வீடமைப்பு அதிகார சபைக்கு, எந்தவொரு கொடுக்கல் வாங்கலும் இல்லை என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அறியப்படுத்தியுள்ளது.

குறித்த காணிக்கும், அரசியல்வாதி ஒருவரின் புதல்வருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு குறித்து, அப்போதைய சந்தர்ப்பத்தில் சர்;ச்சைக்குரிய செய்திகள் வெளியாகின.

குறித்த நபர் தமது அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி, அந்தக் காணியை பிணை வைத்து, இரண்டு வங்கிகளில், பாரியளவான கடனைப் பெற்றுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதுடன், அது குறித்த வழக்கு, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு முன்னிலையில், தற்போது விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறது.

கொழும்புக்கு மத்தியில் உள்ள பெறுமதியான இதுபோன்ற காணியை, எந்தவித அபிவிருத்திப் பணிக்காகவும் பயன்படுத்தாமல், வீணாகுவதற்காக இடமளித்தமை எவ்வாறான அநீதியாகும்.

இதுபோன்ற பெறுமதியான அரச காணியை, அபிவிருத்தி செய்யும் போர்வையில், அரசியல் தொடர்புகளின் அடிப்படையில், தங்களது நட்பு வட்டத்திற்குள் உள்ள வியாபாரிகளுக்கு வழங்கும் மோசடியான வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அதிகாரிகளின் தலையாய கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *