கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனை நேற்று(08) அமைச்சில் சந்தித்தபோது, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கையின் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பில், ஒன்ராறியோ சட்டமன்றத்தில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் உறுப்பினர்கள் பொதுச்சட்டம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச்சட்டம் ஒன்ராறியோ மேல் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, பல தசாப்த கால மோதலைத் தொடர்ந்து, சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கான முயற்சிகளை இலங்கை தொடர்வதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள், கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும் என்பதையும் அமைச்சர் நினைவு கூர்ந்ததாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ சட்டமன்றத்தின் தீர்மானமான இந்த விடயம், அரசியலமைப்பு சார்ந்த கேள்வி என்ற வகையில், நீதித்துறையின் செயற்பாட்டில் உள்ளதாகக் கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதன் முன்னேற்றங்கள்குறித்து அமைச்சருக்குத் தெரிவிப்பதற்கு, கனேடிய உயர்ஸ்தானிகர் இணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed