நாட்டில் மக்களுக்கு, சில மோசடிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அவசர எச்சரிக்கையொன்றை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நாணயம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய முடக்கத்தை நீக்க உதவக்கூடிய யாராவது ஒரு நபருக்கு கவர்ச்சிகரமான தொகையை வழங்குவதாகவும் தெரிவித்து சில மோசடிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சில சமயங்களில் அவர்கள் பல்வேறு கணக்குகளுக்குப் பெருந்தொகைப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீளப்பெற மத்திய வங்கியின் அனுமதியைப் பெறவேண்டி மட்டுமே இருப்பதாகவும் காட்டும் போலி ஆவணங்களையும் காட்சிப்படுத்துகின்றனர்.

இத்தகைய சில சந்தர்ப்பங்களில், மேற்படி பரிமாற்றங்களை நிறைவேற்றுவதற்காக தனிநபர் அடையாள இலக்கங்கள், அட்டை சரிபார்த்தல் இலக்கம், அதேநேர கடவுச்சொல், பயன்படுத்துனர் அடையாள இலக்கம், கடவுச்சொல், தொலைபேசி/ இணைய வங்கியியலின் அதேநேர கடவுச்சொல் உள்ளிட்ட கணக்கு விபரங்களை வாடிக்கையளர்களிடமிருந்து மோசடியாளர்கள் கோருகின்றனர்.

வாடிக்கையாளர் அத்தகைய விபரங்களை அளிப்பதானது அவர்களைப் பாரிய நிதி ஆபத்திற்கு இட்டுச் செல்லும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இத்தகைய மோசடியான அறிவித்தல்களையும், நடைமுறைகளையும் கருத்திற்கொள்ள வேண்டாம். இவ்வாறான மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் எல்லோரும் எச்சரிக்கப்படுகின்றனர்.

எனவே மக்கள் எந்தவொரு இரகசியத் தரவுகளையும் குறிப்பாக, கணக்குப் பயன்படுத்துனர் அடையாள இலக்கம், கடவுச்சொல், தனிநபர் அடையாள இலக்கம், அதேநேர கடவுச்சொல் மற்றும் கணக்கு சரிபார்த்தலுடன் தொடர்புடைய தரவுகள் போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம்.

மேலும், குறுந்தகவல் சேவை எச்சரிக்கை, அதேநேர அறிவிப்புச் சேவைகள் முதலியவற்றைத் தங்களது வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ள ஒவ்வொருவரும் நடவடிக்கை மேற்கொள்வது நன்று.

இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் கணக்குகளைப் பாவித்து ஏதேனும் மோசடிகள் இடம்பெறுகின்றனவா என்பதை உடனடியாக அறியலாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed